--- --:--:-- --

மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்..!

8

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு என்றும், அரசே இதனை முழுமையாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், புதுச்சேரி மின்துறையின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு முடிவெடுத்ததைச் சுட்டிக்காட்டினார்.

 

ஆனால், இந்த டெண்டரை எடுக்க யாரும் முன்வராததால், கடந்த 27 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் டெண்டர் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது (ஜனவரி 5, 2026) அந்த டெண்டரை அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “டெண்டர் எடுக்க ஆள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால், மின்துறை தனியார்மயம் என்ற கொள்கை முடிவை அரசு மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் இணைந்து ‘தனியார்மயமாக்கும் முடிவு முழுமையாக கைவிடப்படுகிறது’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார்.

 

தற்போது 100 சதவீத பங்குகள் டெண்டர் ரத்து செய்யப்பட்டாலும், 51 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அன்பழகன் கடுமையாக விமர்சித்தார். “மின்துறையின் ஒரு சதவீத பங்கை கூட தனியாருக்கு விற்பனை செய்ய அதிமுக அனுமதிக்காது. துணைநிலை ஆளுநர் இதில் தலையிட்டு மத்திய அரசின் 51 சதவீத விற்பனை அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

 

மேலும், மின்துறை ஊழியர்கள் பொதுமக்கள் நலன் கருதி பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியின் மதுபானக் கொள்கை குறித்தும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

 

புதுச்சேரியில் வீதிக்கு வீதி, 10 மீட்டருக்கு ஒரு கடை என்ற விகிதத்தில் மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டோபார்கள் பெருகிவிட்டன. அரசு ஒருபுறம் மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, மறுபுறம் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை மறித்து மது அருந்தியதற்காக 10,000 ரூபாய் அபராதம் விதிப்பது நியாயமற்றது. தொட்டிலையும் ஆட்டிவிட்டு, குழந்தையையும் கிள்ளி அழுவது போல அரசின் இந்த இரட்டை வேடம் இருப்பதாக அவர் சாடினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், இணைச்செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon