டிச.12-ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை..!
கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. மேலும் புதிய பயனாளர்களையும் இணைத்து இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்த வகையில், அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது.
அண்மையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்திய தமிழ்நாடு அரசு, இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு பெண்களை கேட்டுக் கொண்டது. மேலும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
நவம்பர் 15 வரை நடந்த இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த்துறையினர் தீவிரமாக கள ஆய்வு செய்தனர். அதன்படி, இத்திட்டத்துக்கு 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




