--- --:--:-- --

காசி தமிழ் சங்கமம் 4.0 நாளை கோலாகலத் தொடக்கம்..!

7

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பு (KTS 4.0) டிசம்பர் 2-ம் தேதி (நாளை) தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முதல் கட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை விருந்தினராகவும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

ஏற்பாடுகள் தீவிரம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சகத்தின் (உயர்கல்வித் துறை) இணைச் செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால், இந்த ஆண்டிற்கான காசி தமிழ் சங்கமத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உள்ளது.

 

2 கட்டங்களாக விழா: இந்த முறை காசி தமிழ் சங்கமம் 4.0 இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று கோவிந்த் ஜெய்ஸ்வால் விளக்கினார். முதல் கட்டம்: வாரணாசியில் (காசி) டிசம்பர் 2 முதல் 15 வரை நடைபெறும். இதில் தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தரவுள்ளன.

 

2-ம் கட்டம்: தமிழ்நாட்டில் டிச.15 முதல் 31 வரை நடைபெறும். இதில் வாரணாசியில் இருந்து சுமார் 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வார்கள். கூடுதலாக, பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர் என்பது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon