--- --:--:-- --

என்னை தனது மூத்த அண்ணனாக ஏற்றுக் கொண்டவர் ராகுல் காந்தி – முதல்வர் ஸ்டாலின்

1

சகோதரர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மேல் காட்டக் கூடிய அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் இல்லத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர், மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். சுயமரியாதை உணர்வுடன் திருமணம் நடந்து இருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் முறைப்படி சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடிய அங்கீகாரம் முன்பு இல்லாமல் இருந்தது.

 

1967-க்கு பிறகு திமுக அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார்.கலைஞருடன் சொக்கர் நெருங்கி பழகியவர். சொக்கர் உடன் பாசமாக உரிமையாக பழகியவர் கலைஞர். சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என எனக்கே பாடம் எடுத்தவருக்கு சொக்கர்.

 

திமுக, காங்கிரஸ் பேரியக்கம் ஒரு காலத்தில் வேறு வேறு பாதையில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சகோதரர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மேல் காட்டக் கூடிய அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.

 

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கும் போது நான் யாரையும் சகோதரர் என்று குறிப்பிட்டதில்லை. ஆனால் ராகுல் காந்தியை மட்டும் சகோதரர் என்று அழைக்கிறேன். காரணம் அவர் என்னை மூத்த அண்ணன் என்று குறிப்பிடுகிறார். போனில் பேசும் போதும், நேரில் பேசும்போதும் “மை டியர் பிரதர்” என்று அழைக்கிறார்.

 

அதை மறக்க முடியாது.அரசியல் உறவாக மட்டுமல்லாமல், கொள்கை உறவாகவும் வலுபெற்று இந்தியாவின் குரலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும், கொள்கையல் உறவும் நிச்சமயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். அது உறுதி. மகிழ்ச்சியான நேரத்தில் மணமக்களை கேட்டுக் கொள்வது, உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon