நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்து.. 4 வயது சிறுமி உயிரிழப்பு!
ஆரணி அருகே, நாய் குறுக்கே வந்து மோதியதால் சாலையில் சென்ற பைக் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது 4 வயது மகள் அனாமிகா, எல்கேஜி படித்து வந்தார்.
இந்நிலையில், கார்த்திக்கும், அனாமிகாவும் ஆரணி நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்து வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. அதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமி அனாமிகா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் குறுக்கே வந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




