ரூ.487 கோடி மதிப்பு 1,200 கிலோ போலி தங்க நகைகள் ஏற்றுமதி!
சமீப காலமாக விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடிகை ரம்யா ராவ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சுமார் 14 கிலோ 800 கிராம் தங்கத்தைக் கடத்தியது தெரியவந்ததை அடுத்து, அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. குறிப்பாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணயில், இந்த தங்கக் கடத்தல் மத்திய அரசின் ஊழியர்கள் உதவியின்றி கடத்த வாய்ப்பில்லை என்றும் தெரியவந்தது. மேலும், இந்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ) விசாரிக்க வேண்டும் என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் மீனம்பாக்கம் அண்ணாநகர், கொரட்டூர் பூக்கடை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இதில் குறிப்பாக அண்ணாநகர், கோயம்பேடு பகுதியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டிலும் நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், இதில் 4 சுங்கத்துறை அதிகாரிகள், 3 நகைக்கடை உரிமையாளர்கள் என 10 பேர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. மேலும், சுங்கத்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை விமான நிலைய சரக்குப்பகுதி சுங்க அதிகாரிகள் தனியார் நகைக்கடை உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து இதுபோன்ற, ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்தின் பெயரில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
2023-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில், சுங்கத்துறை ஆணையர் கனகசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில், முதல் கட்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சுங்கத்துறை அதிகாரி சுரேஷ்குமார், சுமார் 739 கிலோ அதாவது ரூ.299 கோடி மதிப்பிலான போலி நகைகளை அனுமதித்ததும் இது போல பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சுமார் ரூ.487 கோடி மதிப்புள்ள 1,200 கிலோ போலி தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




