சென்னை எம்எல்ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத்துறை முடிவு?
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்பு உள்ள இடங்களில் அமலாகத்துறையினர் சோதனையிட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் அறையின் பூட்டை உடைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில் குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். அதோடு வள்ளலார் நகரில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 10 இடங்களிலும் 3 வாகனங்களி வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய 30 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் அறையில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அறை பூட்டப்பட்டு இருந்ததால் நீண்ட நேரமாக அறைக்கு வெளியே காத்திருந்தனர். இதனிடையே எம்.எல்.ஏ விடுதிக்கு வந்த சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அறையை உடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்தபோது, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி துறை நிலம் ஒதுக்கீடு செய்து அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டியதில் ஜாபர் சேட் மனைவிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ஐ பெரியசாமியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில் , வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




