முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்!
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு, மலைப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் திறந்தவெளி ஜீப்பில் சென்று பார்வையிட்டார். பின்னர் கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ஆவது முறையாக ஏற்றி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை, எப்போதும் போராடி பெறும் நிலை நீடிப்பதாகவும், இது கூட்டாட்சி இந்தியாவிற்கு அழகல்ல என்றும் கூறினார்.
இது, மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமின்றி, இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:-
1.தமிழ்நாடு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2.தியாகிகளின் குடும்பங்களுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ₹12,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
3.இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
4.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5.முன்னாள் படை வீரர்களுக்கு மாதவரத்தில் ₹22 கோடியில் தங்கும் விடுதி கட்டப்படும்.
6.மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
7.விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ₹11,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
8.ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.
9.கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் 10,000 பேருக்கு ரூ.15 கோடியில் இணைய வழியில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.





