தனித்துவம் இழக்கும் தமிழக பாஜக.. நயினார் வந்தபின் தொண்டர்கள் அதிருப்தி.. அதிமுகவிடம் கட்சியை அடகு வைத்ததாக விரக்தி!
நெல்லையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடபுடல் விருந்து கொடுத்து, நயினார் நாகேந்திரன் அசத்தி உள்ளார். மறுபுறம், பாஜக அணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறி இருக்கிறார். நயினார் நாகேந்திரன் வந்த பிறகு அதிமுகவின் அடிமைபோல் தமிழக பாஜகவை மாற்றிவிட்டதாகவும், அண்ணாமலை இருந்தபோது தனித்துவமாக இருந்த பாஜக, இப்போது படிப்படியாக செல்வாக்கை இழந்து வருவதாகவும், தாமரைக் கட்சியினர் குமுறுகிறனர்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’என்ற பெயரில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சனிக்கிழமையான்று தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அன்றிரவு, நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்கினார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை மாவட்டம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டம் ஆகும். எனவே, தனது மாவட்டத்தில் பயணம் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தலைவர்களுக்கு தமது வீட்டில் பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு, நெல்லையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் அளித்த விருந்தில், 109 வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன. அசைவம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சைவை உணவு வகைகளே இடம் பெற்றிருந்தன. இதில், 4 வகை ஸ்பானீஷ், சைனீஸ் சூப்கள், 2 வகை தாய், இந்திய சாலட்டுகள், 3 வகை நெல்லை அல்வா, 11 வகை இனிப்புகள் பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம், நெல்லை சொதி, சிறுதானிய உணவுகள், 8 வகை சாதங்கள், 14 வகை தோசைகள், சுக்கு பனங்கற்கண்டு பால், 17 வகை ஐஸ்கிரீம்கள், 7 வகை ஜூஸ்கள் என மொத்தம் 109 வகை உணவுகள் பரிமாறப்பட்டன.
நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்த விருந்தில் அதிமுக தரப்பில் மூத்த தலைவர்கள் தளவாய் சுந்தரம், எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார், விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஆனால், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விருந்தை அடியோடு புறக்கணித்தார். அவருக்கும், எடப்பாடி பழனிசாமிக்குமான முட்டல் மோதல் இன்னமும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட, ஈரோட்டில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலையும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். ஆனால், நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்த விருந்திற்கு மட்டும் அண்ணாமலை வராமல் தவிர்த்தார்.
விருந்திற்கு முன்பாக, நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தின் முதல் மாடியில் எடப்பாடி பழனிசாமியுடன் தனியேவும் பின்னர் நிர்வாகிகளுடன் இணைந்தும் முக்கிய ஆலோசனைகளை செய்தார். சுமார் 1 மணி நேரம் நீடித்த ஆலோசனையில், அதிமுக- பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வகையில் இனி தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்யக்கூடாது; இரு கட்சிகளிலும் கீழ்மட்டத்தில் தொண்டர்கள் அளவில் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நெல்லையில் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழக அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் பிரமாண்டமான விருந்து அளித்தாலும், இதை பாஜக தொண்டர்கள் விரும்பவில்லை.
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றா பின்னர், கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளதாக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலவும் மனம் குமுறுகின்றனர். இது தொடர்பாக குற்றம் குற்றமே தரப்பில், பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தபோது, பாஜகவின் வளர்ச்சி அருமையாக இருந்தது.
அதிமுக- திமுக என்ற இரு பெரும் கழகங்களுக்கு சவால் விடும் வகையில் அண்ணாமலை செயல்பட்டு, கிராமங்கள் வரை தாமரையை கொண்டு சேர்த்தார். எந்த கட்சிக்கும் அடிபணியாமல், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலாக அண்ணாமலை செயல்பட்டார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பாஜகவில் இணைந்தனர்.

ஆனால், நயினார் நாகேந்திரன் வந்த பினர் எல்லாமே தலைகீழாகிவிட்டது. முன்பிருந்த உற்சாகம் பாஜக தொண்டர்கள் இடையே இப்போது இல்லை. கட்சியின் தனித்துவத்தை பாதிக்கும் வகையில், நயினார் நாகேந்திரன் செயல்படுகிறார். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது, தமிழக பாஜக ஒரு தனித்துவமான அடையாளத்துடன் களத்தில் செயல்பட்டது. ஆனால், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு, தாமரைக் கட்சி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்து வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் நயினார். அதனால் இன்னமும் அந்த விஸ்வாசம் இன்னமும் குறையவில்லை. ஆனால், அதற்காக பாஜகவை அதிமுகவின் துணை அமைப்பு அவர் நடத்துவதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இதுபோதாதென்று, பாஜக அணியை மேலும் பலவீனப்படுத்தும், ஓபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார். பாஜகவின் தலைமை, ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதன் மூலம், அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை தங்கள் வசம் வைத்துக் கொள்ள முடியும் என்று கணக்கிட்டது. ஆனால், ஓ.பி.எஸ்-ன் வெளியேற்றம், அந்த கணக்கை தவிடுபொடியாக்கி உள்ளது.
நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் அதிருப்பதி அளிக்கிறது. அவருக்கு வசீகரிக்கும் பேச்சு இல்லை. அரசியல் நெளிவுசுளிவு தெரியாமல், அதிமுகவின் கிளை அமைப்பு போல் பாஜகவை மாற்றி வருகிறார். இது வரும் தேர்தலில் பாஜகவை மேலும் பலவீனப்படுத்த வேண்டும்.
எனவே, டெல்லி மேலிடம் விரைவில் தலையிட்டு, நயினாரின் போக்கை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பாடுபட்டு அண்ணாமலை வளர்த்த தமிழக பாஜக இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இவ்வாறு பாஜக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.





