--- --:--:-- --

நேற்று இரவு முழுவதும் பெய்த மழை..!

1

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

 

கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர், அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், அடையாறு, கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வட சென்னைக்குட்பட்ட ராயபுரம், மணலி, எண்ணூர், கொடுங்கையூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

 

திருவொற்றியூரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற நெளபுல் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி, திருமழிசை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், அயப்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஆவடியில் வானில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே இடைவிடாது மின்னல் பளீர்-பளீர் என தோன்றியதால், இரவு வானம் பகல் போல் காட்சியளித்தது. பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

 

சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் 10 ஆரோக்கியமான உணவுகள்.!
சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் 10 ஆரோக்கியமான உணவுகள்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாளையம், மீஞ்சூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பூண்டி, பெரியபாளையம், தண்டலம், பாரிவாக்கம், கோளப்பன்சேரி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரங்களான இலக்கியம்பட்டி, பாரதிபுரம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பென்னாகரம், ஒகேனக்கல் சுற்றுவட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது.

 

சேஷம்பட்டியில் பெய்த மழையில் விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி குணசேகரன் உயிரிழந்தார். அவரது எருமை மாடும் பரிதாபமாக இறந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூ டவுன், பேருந்து நிலையம், ஜனதாபுரம் பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon