போலி வலைத்தளங்கள் : ரூ.30 கோடி மோசடி
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், இணையவழிக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். ஃபேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து, சந்தை விலையை விட 10% குறைவாக TMT கம்பிகள் கிடைப்பதாக நம்பியுள்ளார். விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, அனைத்து விவரங்களையும் பெற்றிருக்கிறார்.
அந்த நிறுவனத்தின் பெயரிலேயே ஜிஎஸ்டி எண் மற்றும் வங்கிக் கணக்குகள் இருந்ததால், ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் பணத்தைச் செலுத்தியுள்ளார். நான்கு நாட்களாகியும் அந்த தொலைபேசி எண்ணையோ, ஃபேஸ்புக் பக்கத்தையோ தொடர்புகொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.இந்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் S. தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.
விசாரணையின் முதல் கட்டத்திலேயே, சேதுராமன் பார்த்தது வைசாக் ஸ்டீல் நிறுவனத்தின் உண்மையான ஃபேஸ்புக் பக்கம் அல்ல, அது இணையவழி மோசடிக்காரர்களின் வேலை என்பதைப் போலீசார் கண்டறிந்தனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா உத்தரவின் பேரிலும், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படியும், ஆய்வாளர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி, கீர்த்தி தலைமையிலான இணையவழிப் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமை காவலர் மணிமொழி, காவலர்கள் வினோத், பாலாஜி, மற்றும் வினோத்குமார் ஆகியோர் அடங்கிய இக்குழு, கடந்த மாதம் 20-ம் தேதி மத்திய பிரதேசத்திற்கு விரைந்தது.
அங்கு விசாரித்து பல்வேறு தகவல்களைத் திரட்டியதில், குற்றவாளிகள் ஜார்கண்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் ஜார்கண்ட் விரைந்தனர். அங்கு நடந்த விசாரணையில், குற்றவாளி பீகார் சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை பீகார் மாநிலம் பாட்னாவிற்கு இந்த மாதம் 23-ம் தேதி விரைந்தது. அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்தது.
விசாரணை மேற்கொண்டதில், 40-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், டேப் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இணையவழி மோசடிக் கும்பல் பீகார் தலைநகரிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




