--- --:--:-- --

திடீரென சிறைபிடிக்கப்பட்ட ஜேசிபி, லாரிகள்..!

4

திருச்சி அருகே பொன்மலை மாவடிகுளத்தில் ரயில்வே பணிக்காக மண் அள்ளுவதாகக் கூறி சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம், பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி. இயந்திரங்களைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை மஞ்சள்திடல், கம்பிகேட் உள்ளிட்ட பகுதியில் புதிய ரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு மண் தேவைப்படுவதால் பொதுப்பணித் துறையினரிடம் மாவடிகுளத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3டி ஆழத்திற்கு மண் அள்ளிக் கொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி பெற்று மண் அள்ளி வருவதாக கூறப்படுகிறது.

 

தனியார் லாரி உரிமையாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் 2.5 ஏக்கருக்கு பதிலாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலும் மூன்றடிக்கு பதிலாக சுமார் 6 அடி அளம் வரை சட்டத்துக்கு புறம்பாக மண் எடுத்து ரயில்வே பணிக்கு மட்டுமல்லாது, தனியார் இடத்திற்கும் கடத்தப்படுவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன் அடிப்படையில் அதிரடியாக மாவடிகுளத்தில் மண் அள்ளிய 10-க்கும் மேற்பட்ட லாரிகளையும், 5-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இச்சம்பவம் பற்றி திருச்சி கிழக்கு தாசில்தார் சக்திவேலுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு சம்பந்தப்பட்ட லாரிகள் மண் அள்ளுவதற்கு உரிய பர்மிட் வைத்துள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும், இச்சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon