விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, இன்று அதிகாலை 1.05 மணிக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மற்றும் எல்லைக் கோடு பகுதியான (LoC) ஆகிய இரு இடங்களில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகளான ஒன்பது இடங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய குடிமகள் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலரும் காயமடைந்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு மூடப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் இந்த விமானநிலையங்களுக்கு இயக்கப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்பைஸ் ஜெட் தனது எக்ஸ் பக்கத்தில், “தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களுக்கு, அடுத்த அறிவிப்பு வரும் வரை எங்களது விமானங்கள் இயக்கப்படாது.
பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளும் முன்பு விமானம் குறித்து அறிந்துகொண்டு, பின் தங்கள் பயணத்தை திட்டமிடவும்” எனத் தெரிவித்துள்ளது.இதேபோல் இண்டிகோ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “தற்போதைய சூழ்நிலையால், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர் மற்றும் தர்மசாலா ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் விமானநிலையம் செல்லும் முன் தங்கள் விமானம் குறித்த தகவல்களை அறிந்துகொண்டு பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய விமானநிலையங்களுக்கு ஏர் இந்தியா விமான சேவை மே 7ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




