சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன் – சிராக் பாஸ்வான்
“பீகார் முதலில், பீகார் மக்கள் முதலில்” என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்.ஜே.பி – ஆர்வி) தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார். பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.டெல்லியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்ச்சியில் பேசிய மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க அரசாங்கத்திற்கு தரவுகளை வழங்கும் என்று நம்புவதாக கூறினார்.
ஆனால், அத்தகைய தரவுகள் சாதியவாதத்தை தூண்டும் என்பதால் பொதுவெளியில் வெளியிடப்படக்கூடாது என்றும் கூறினார். “சாதி அரசியலை ஆதரிக்கவில்லை, ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன்” என்பது முரண்பாடாக தோன்றினாலும், சாதி என்பது நாட்டின் கசப்பான உண்மை என்று பாஸ்வான் கூறினார். மக்களின் மேம்பாட்டிற்கான பாகுபாடு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் இரண்டும் சாதியின் அடிப்படையில் அமைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில அரசுகள் சாதி தரவுகளை வைத்திருக்க வேண்டும், ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனந்த் கோயங்கா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தேசிய கருத்து ஆசிரியர் வந்திதா மிஸ்ரா ஆகியோருடன் பாஸ்வான் உரையாடினார்.
“பீகார் முதலில், பீகார் மக்கள் முதலில்” என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறிய பாஸ்வான், “எனக்கு மை ஃபார்முலா (MY Fromula – இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள்) உள்ளது. எனது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2 பேர் பெண்கள். 14 கோடி பீகார் மக்களைப் பற்றி நான் பேசுகிறேன். பீகார் மக்கள் பீகாரை விட்டு வெளியே வந்து சாதியை மறக்கும்போது, ஊடகம், கார்ப்பரேட் மற்றும் அதிகாரத்துவம் என ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்” என்றார்.பீகாரின் வளர்ச்சிக்காக உழைப்பதுதான் தற்போதைய தேவை என்றும், மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அதை அடைய உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில் தற்போதைய என்.டி.ஏ கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்காக இலவசங்களை வழங்குவது குறித்து கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, “சமீபத்தில், ஆம், அது ஒரு கவலை. பணத்தைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு வரி செலுத்துபவராக, வங்கிகளில் பணம் போடுவதை விட சேவைகள் மிகவும் முக்கியம் என்று கூறுவேன்.
கல்வி மற்றும் சுகாதாரம் இலவசமாக இருக்க வேண்டும். 2047-க்குப் பிறகு, நாம் ஒரு வளர்ந்த நாடாக மாறும் போது, இந்த விஷயங்கள் சேவைகளில் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்றார். வக்பு திருத்த சட்டத்தை நியாயப்படுத்திய எல்.ஜே.பி (ஆர்.வி) தலைவர், குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) அல்லது பிரிவு 370 ஆக இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவநம்பிக்கையை பரப்ப சில வட்டாரங்களில் ஒரு போக்கு உள்ளது என்றார்.
சி.ஏ.ஏ சில அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால், அது குடியுரிமையை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் ஒரு கதையை உருவாக்கியது என்றும், அது பல ஆண்டுகளாக தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




