அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!
அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் ஒப்பந்தம் சார்பாக TVH குழுமம் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களான கோயம்புத்தூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 7 மணியிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். இந்த நிறுவனம் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், தில்லைநகர் 5வது தெருவில் உள்ள கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவின் இல்லத்திலும், கே.என். நேருவின் சகோதரரான மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் வீடு அமைந்துள்ள தில்லை நகர் 10வது குறுக்கு தெருவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இது தவிர சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரும், TVH கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான மணிவண்ணனுக்குச் சொந்தமான கோவை இல்லத்திலும், கோவை-திருச்சி சாலையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்சியில் அருண் நேருவின் வீட்டில் ஏறத்தாழ 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாலை 5:30 மணி அளவில் சோதனை நிறைவு பெற்றதாகக் கூறப்படும் நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிப் பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அரசியல் ரீதியாக குழப்பம் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக, திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




