--- --:--:-- --

திமுக அரசை திடீரென பாராட்டும் பிரேமலதா..!

2

திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த பிரேமலதா விஜயகாந்த், திடீரென தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்ட தொடங்கி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக சார்பில், விருதுநகரில் போட்டியிட்ட பிரேமலதாவின் மகன் விஜயபிரபாகரன் தோல்வியை சந்தித்தார்.

 

ஆயினும் அதிமுகவில் மகனுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வாங்கிடலாம் எனக் கட்சியினரிடமும் பேட்டிகளிலும் நம்பிக்கையுடன் கூறி வந்தார். மேலும் தேர்தலின்போது அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதாகவும் கூறினார். சமீபத்திய பேட்டியிலும் கூட, கூட்டணியின் போதே ராஜ்யசபா எம்பி சீட் குறித்து பேசி முடிவெடுத்துவிட்டதாக கூறியிருந்தார்.

 

ஆனால் சில நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமியோ, “தாங்கள் அப்படி சொல்லவே இல்லை” என கைவிரித்தார்.மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் கட்சியின் பெயரைக் காக்க மாநிலங்களவை எம்பி பதவியாவது கைகொடுக்கும் என பிரேமலதா கருதினார். அதன்பின்னர் எம்பி சீட் தொடர்பான கேள்விக்கு பிரேமலதா பதில் அளிப்பதை தவிர்த்து வந்தார். எடப்பாடி பழனிசாமி “வெற்று பட்ஜெட்” எனக் கூறிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையை பிரேமலதா பாராட்டினார்.அதில், “தேமுதிக பட்ஜெட்டை வரவேற்கிறது.

 

அதற்கான காரணத்தையும் சொல்கிறேன். 2006 தேர்தலில் தேமுதிக தேர்தல் அறிக்கையில் கேப்டன் கொடுத்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக தான் பட்ஜெட்டை வரவேற்கிறோம்” என்றார் பிரேமலதா.எம்பி சீட் பிரச்சனை ஏற்பட்டதும் 2026ம் ஆண்டு கூட்டணி கணக்கை மனதில் வைத்து தான் திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா பேசுகிறாரா என்ற கேள்வி எழ அதற்கும் அவர் பதில் அளித்தார்.

 

அதில், “திமுகவின் பட்ஜெட்டை வரவேற்றதால் கூட்டணி என்று பார்க்க வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்விருக்கின்றன. எனவே, கூட்டணிக்காகவோ, தேர்தல் வியூகத்துக்காகவோ பட்ஜெட்டை வரவேற்கவில்லை.” என்றார் பிரேமலதா.இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது பேசுபொருளானது.

 

இந்நிலையில், பிரேமலதாவிடமே கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் அவர் நேரடி பதிலை அளிக்கவில்லை. “2026ல் என்னுடைய பிறந்த நாளில் கூட்டணி குறித்து தெரிவிக்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon