டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என பொத்தாம் பொதுவாக கூறாமல், ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டையும் பிரேமலதா பாராட்டியுள்ளார்.
பழனியில் பேட்டியளித்த பிரேமலதா, தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினார். மேலும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல், மும்மொழிக் கொள்கை மற்றும் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு விஷயங்களில் தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்படும் என நாடாளுமன்ற தேர்தலின் போதே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, “மாநிலங்களவை உறுப்பினர் பற்றி நாங்கள் ஏதும் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை எல்லாம் எங்களிடம் கேட்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதன்படி தான் நடக்க முடியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பிரேமலதாவிடம் மாநிலங்களவை எம்.பி. சீட் விவகாரத்தில் அதிமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த மாதிரி எதுவும் கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார். கூட்டணி குறித்து பேச இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நிலையில், இன்று திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.