மார்ச் 20ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 – 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 – 35° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நாளை முதல் மார்ச் 22ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் மார்ச் 20ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.