--- --:--:-- --

சபாநாயகரை சந்தித்தது ஏன்? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கம்

1

சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என்பதை செங்கோட்டையன் விளக்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில், அதிமுக எம்.எல்.ஏ.-க்களின் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேரடியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சட்டசபைக்குள் எடப்பாடி பழனிசாமி நுழைந்த போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த நிலையில், அமைதியாக இருந்த செங்கோட்டையன், அவரை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தார்.

 

மேலும், சட்டப்பேரவையை விட்டு, அதிமுகவினர் வெளிநடப்பு செய்த போதும், எடப்பாடி பழனிசாமியுடன் செய்தியாளர்களை சந்திக்காத செங்கோட்டையன், சபாநாயகர் நுழைவு வாயில் வழியாக வெளியேறினார்.இதன் தொடர்ச்சியாக, இன்று காலையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறைக்கு செல்லாத செங்கோட்டையன், சபாநாயகர் அறையில் அமர்ந்து விட்டு, நேரடியாக பேரவைக்குள் சென்றார்.

 

இந்நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, தன்னை சந்திக்காமல் தவிர்ப்பது குறித்து செங்கோட்டையனிடமே கேட்குமாறு பதில் அளித்தார். இதனிடையே, சட்டப்பேரவையில் செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

செங்கோட்டையன் அருகில் அமர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி. அன்பழகன், காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவு பெற்றதும் செங்கோட்டையன் தனியாக புறப்பட்டுச் சென்றார்.

 

இதற்கிடையே, சபாநாயகரை சந்தித்தது ஏன் என்பதை செங்கோட்டையன் விளக்கியுள்ளார். அதில், தொகுதி பிரச்சினைக்காக சபாநாயகரை சந்தித்தேன் என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்று என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

தொகுதியில் சுற்றுச்சூழல் பிரச்சனை தொடர்பாக சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்தேன் என்றும் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon