தமிழ்நாட்டில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மூன்று பேரூராட்சிகள்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை, ‘ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
அப்போது அவரது கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்’ என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், மற்றும் தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




