--- --:--:-- --

என்ன நடக்குது பாமகவில்? சாட்டை சுழற்றிய ராமதாஸ்..சரண்டர் ஆன அன்புமணி..?

3

டுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் வெடித்த அதிகார மோதல் அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே பொதுக்குழு மேடையில் மோதல் வெடித்தது. அன்புமணியா, ராமதாஸா என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருக்க, திடீரென அன்புமணி சரண்டாகி பல்டி அடித்தார்.

 

தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. ஒருபுறம் திமுக- அதன் கூட்டணி கட்சிகளுக்குள் கசமுசா; பாஜகவில் புதிய தலைவர் யார் என்ற பரபரப்பு; கூட்டணிக்கு யாரை இழுக்கலாம் என அதிமுகவுக்குள் ஒரே குழப்பம் என்று நிலைமை இருக்க, பாமகவில் ஏற்பட்ட சலசலப்பு இதையெல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டது. பரபரப்போடு ஆரம்பித்த பொதுக்குழு என்ற நாடகம், அடுத்த இரு தினங்களில் எந்த டிவிஸ்ட்டும் இல்லாமல் புஸ் என்று நமுத்துவிட்டது. பாமக பொதுக்குழுவில் நடந்த நாடகத்தின் பின்னணியை பார்ப்போம்..

 

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு நிறைவில் பேசினார். அப்போது அவர், “கட்சி பணிகளில் அன்புமணிக்கு உதவியாக இருக்க, மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன்” என்று ஒரு புதிய அறிவிப்பை திடீரென அறிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அன்புமணியின் முகம் சிவந்தது.

உடனடியாக, பொதுக்குழு மேடையில் சூட்டோடு சூடாக தனது எதிர்ப்பை அன்புமணி வெளிப்படுத்தினார். “முகுந்தன் பாமகவில் சேர்ந்தே வெறும் நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவருக்கு எப்படி இளைஞர் சங்கத் தலைவர் பதவி தரலாம்? என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். ஏனென்றால், களத்தில் பணியாற்ற திறமையான ஆட்கள் வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார் அன்புமணி.

 

அன்புமணியின் பேச்சால் ராமதாஸின் பி.பி. எகிறியது. கொதித்துப் போன ராமதாஸ், அன்புமணி பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டார். “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி” என்று கடுமையாக பேசினார்.

 

திடீரென தந்தையும் மகனும் வார்த்தை போரால் மோதிக்கொண்டது, பொதுக்குழுவில் வந்த பாமகவினருக்கு கடும் அதிர்ச்சியை தந்தது. என்ன நடக்கிறது என்றே புரியாமல் குழம்பிப்போனார். இதனிடையே நிலைமை கைமீறி போவதை அறிந்த ஜி.கே. மணி, அன்புமணியையும் ராம்தாஸையும் சமாதானப்படுத்த முயன்றார்.

 

ஆனால், அதிரடியாக மேடையிலேயே இன்னொரு அறிவிப்பை வெளியிட்டு அடுத்த அதிரடியை காட்டினார் அன்புமணி. சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு சென்றதுதான் அது.

 

திடீரென இருவரும் மோதிக் கொண்டதால், மார்கழி குளிரிலும் தமிழக அரசியல் களத்தை சூடாகியது. இதனிடையே, பாமக முன்னணி நிர்வாகிகள் சிலர் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, டிசம்பர் 29-ம் தேதியே தைலாபுரம் தோட்டத்தில் தந்தை ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி.

 

பின்னர் பேசிய அன்புமணி, பாமகவின் வளர்ச்சி, தேர்தல் திட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம். பொதுக்குழுவில் நடந்தது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அது குறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்று ஒரே போடுபோட்டார்.

 

அடுத்த சில தினங்களில் ராமதாஸும் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், பா.ம.க பொதுக்குழுவில் நடைபெற்றது எங்கள் உள்கட்சி விவகாரம். பா.ம.க இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். அதை பொதுக்குழுவில் அறிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரிடம் பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

தந்தை- மகன் இருவரிடையே பூதாகரமாக வெடித்த மோதல், திடீரென புஸ்ஸ் என்றாகிவிட்டது. இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல், தற்போதைக்கு ஓய்ந்தது போல் தோன்றினாலும், மனதளவில் இருவருக்கு இடையே ஏற்பட்ட காயத்தின் வடு இன்னமும் ஆறாமல்தான் இருக்கும்.

 

திடிரென தந்தையின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்பட்டது ஏன் என்று கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். பாமக நிர்வகிகள் சிலர் கூறியதாவது: பாமகவில் உட்கட்சி மோதல் பெரிதானால் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு சரிந்துவிடும்; கட்சிக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். இதனால் கூட்டணி பேரம், சீட் ஒதுக்கீடு போன்றவற்றில் சிக்கல் வரலாம் என்று கருதி, தந்தைக்கு இப்போது கட்டுப்பட்டு போவது என்று அன்புமணி முடிவெடுத்துள்ளார்.

 

அதனால், வரும் தேர்தல் வரை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று முழங்கும் தமையனாக, நல்ல தலைவனாக இருக்கவே அன்புமணி விரும்புகிறார். இவ்வாறு பாமகவினர் தெரிவித்தனர்.

 

பாமவில் எழுந்த புயல் ஓய்ந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் வரை ராமதாஸுடன் எந்த பிரச்சினையையும் வராது என்று பாமகவினர் நம்புகின்றனர். எனினும், அன்புமணியை ஆதரிப்பதா, அல்லது ராமதாஸுக்கு சப்போர்ட் செய்வதா என்ற குழப்பம் கட்சியினர் மத்தியில் உள்ளது. அரசியல் களத்தில் உத்வேகமாக செயல்பட்டு வந்த பாமகவுக்கு தந்தை – மகன் மோதல் என்பது ஒரு சறுக்கலாகிவிட்டதே என்று மாம்பழக் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon