ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்திருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டுள்ளதாக கூறியிருந்தது சர்ச்சையானது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என்று பேசியதும் தமிழக அரசியலில் பேசுபொருளானது.
இந்நிலையில் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், “புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது திமுக கூட்டணியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து திருமாவளவன் பேசுகையில், “விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருக்கும் அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும். அவர் வெளிப்படையாகத்தான் அதை பேசுகிறார். திமுக என்னுடைய முதல் எதிரி என்றுதானே பேசுகிறார்.” என்றார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிதாக ஒரு கூட்டணியில் இணைய வேண்டும் என்ற தேவையே எழவில்லை என்றும் திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்ற பாஜக, அதிமுக-வின் நோக்கம் நிறைவேறாது என்றும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் . திட்டவட்டமாகக் கூறினார்.
கட்சியில் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ” ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவதாக நிர்வாகிகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். வி.சி.க.வில் தலித் அல்லாத நிர்வாகிகள் மீதான குற்றசாட்டில் உயர் மட்ட குழு தான் முடிவு செய்யும். அதன்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.” என்றார்.