திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று கோவில் வளாகத்தில் 10,000 -க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து குரு சுவாமிகள் அருள் ஆசியுடன் துளசிமாலை அணிவிக்கப்பட்டு சுவாமியே சரணம் ஐயப்பா என்கிற சரண கோஷத்துடன் சாமிதரிசனம் செய்து விரதத்தை துவங்கினர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது.வருடம் தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று ஐயப்ப பக்தர்கள் குருசாமிகள் அருளாசியுடன் துளசி மாலை அணிந்து கொண்டு விரதம் துவங்குவது வழக்கம்.
அதன்படி இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி என்பதால் பக்தியுடன் காலை 4:00 மணி முதல் கோவிலுக்கு வருகை தந்த ஐயப்ப பக்தர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து விரதத்தை துவங்கினர்.
ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பக்தியுடன் மாலை அணிந்து கொள்ள காலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் 65-ம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20 ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது, அன்று மாலை 6:30 மணிக்கு சபரிமலை பிரதம தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பறையெடுப்பு , நவ கலச பூஜை, வலம்புரி சங்காபிஷேகம், மகாவிஷ்ணு பூஜை, பகவதி சேவை, உற்சவ பலி பூஜை, பள்ளி வேட்டை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் 25ஆம் தேதி காலை முக்கிய நிகழ்வான ஐயப்ப சுவாமி ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு பவானி கூடுதுறையில் ஆராட்டு விழாவும், மாலை 6:30 மணிக்கு திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள் பாலிக்கிறார்.
அதனை தொடர்ந்து பஞ்சவாத்தியம், வானவேடிக்கை, ஒயிலாட்டம், கண்கவர் அலங்கார வேடிக்கையுடன் ஊர்வலம் நடைபெற உள்ளது .
தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.
மண்டல பூஜை விழாவை ஒட்டி மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நாட்டை நிகழ்ச்சியும் குரு சுவாமிகளின் பஜனை பாடல்கள் என கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு வழிபாடுகளும் வருகிற தை 1ம் தேதி வரை நடைபெற உள்ளன.
கோவில் வளாகத்தில் மண்டல பூஜை விழாவை ஒட்டி கார்த்திகை மாதம் முதல், தை மாதம் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் ஸ்ரீ ஐயப்பன் பக்தஜன சங்கத்தினர்கள் செய்து வருகின்றனர்.