திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலரின் அத்துமீறல்களால் அரசு அதிகாரிகளும், பிற வி.ஐ.பி.க்களும் முகம் சுளிக்கின்றனர். குறிப்பாக காவல் ஆணையரக அலுவலக திறப்பு விழாவில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜின் கைத்தடிகள் சிலர் செய்த அட்ராசிட்டி, திமுகவுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் உள்ளிட்ட 17 காவல் நிலையங்கள் உள்ளன. திருப்பூர் மாநகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர காவல் ஆணையரக அலுவலகம் இயங்கி வந்தது.
காவல் ஆணையரகம் திறப்பு விழா
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார் நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றது.
இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் அறை, உதவி ஆணையர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முகம் சுளிக்க வைத்த திமுகவினர்!
அதே நேரம், திருப்பூர் புதிய காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மிகவும் சிறப்பாக நடந்த நிகழ்ச்சிக்கு திருஷ்டி பரிகாரமாக, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரின் நடவடிக்கைகள் பலரையும் முகம் சுளிக்கச் செய்வதாக அமைந்துவிட்டது. முதல்வர் கலந்து கொண்ட காவல் ஆணையர் அலுவலக திறப்பு விழாவுக்கு, வழக்கம் போல் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் கலந்து கொண்டார். மக்கள் நலத் திட்டப் பணிகள், அரசு நிகழ்ச்சிகள் எதிலும் ஆப்சென்ட் ஆகாமல் ஆஜராகி, மக்களின் பணியில் தனது ஈடுபாட்டை எப்போதுமே வெளிப்படுத்தி வருபவர் அவர்.
அழையா விருந்தாளிகளாக வந்த ‘கைத்தடிகள்’
ஆனால், அவருடன் வந்த அவரது கைத்தடிகள் சிலர், நிகழ்ச்சியின் மாண்பையே சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். எம்.எல்.ஏ. செல்வராஜுடன் வந்த அவரது ‘கைத்தடி’கள் சிலர், திமுக கரை வேட்டியுடன் அலம்பரை செய்தனர். கரை வேட்டி கட்டிக் கொண்டு பந்தா செய்த இவர்களை பார்த்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் குனிந்து, பணிந்து வணக்கம் சொன்னது, இன்னும் நெருடலாக இருந்தது.
சரி, இத்துடன் போனது என்று பார்த்தால், கான்பரன்ஸ் ஹால் வரை வந்து தங்களது அட்டகாசத்தை நிகழ்த்தினர். முதலமைச்சர் திறந்து வைப்பதற்காக இருந்த கான்பரன்ஸ் ஹாலில், திருப்பூர் கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் மு.பெ. சாமிநாதன், எம்.பி சுப்பராயன், எம். எல். ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4 வது மண்டல தலைவர் பத்மநாபன் ஆகியோர் முறையான அரசு அழைப்பின் பேரில் வந்தனர்.
ஆனால், அழையாத விருந்தாளிகளாக வந்த திமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தங்கராஜ் உள்பட பல்வேறு தி.மு.க கரை வேட்டிய நிர்வாகிகள் முதலமைச்சருடன் பேசக்கூடிய கான்ஃபரன்ஸ் ஹாலில் உட்கார்ந்து கால் மேல் போட்டு போனில் பேசி பந்தா செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் செய்த லூட்டிகள் பார்க்க மிகவும் கொடுமையாக இருந்தது.
டீ, காபியை பார்த்தே இல்லையா?
இந்த கைத்தடிகளின் அட்டகாசம் அத்துடன் நிற்கவில்லை. வரும் வி.ஐ.பிகளுக்காக அளவாக ஏற்பாடு செய்திருந்த காரம், இனிப்பு, டீ , காபியும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இவற்றையெல்லாம் ருசித்துப் பார்த்ததே இல்லை என்பது போல, தீனிகளை கண்டதும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை வாங்கிச் சாப்பிட, மற்றவர்களுக்கு எதையும் வழங்க முடியாமல் போனது. அட்ராசிட்டி ஒருபுறம் என்றால், அதிலும் கொஞ்சம் கவுரவம் பார்க்க வேண்டாமா என சில சக திமுகவினரே முகம் சுளித்தனர்.
அரசு விழாவான போலீஸ் மாநகர கமிஷனர் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிட திறப்புவிழாவில் திமுகவினருக்கு என்ன வேலை? இதனால் காவல் ஆணையரக திறப்புவிழா, ஒரு அரசு விழா போல் அல்லாமல் கரை வேட்டி கட்டிய தி.மு.க. விழாவாக மாறியது. இனியாவது அரசு விழாக்களில் இதுபோன்ற அழையாத விருந்தாளிகளை கண்டிப்புடன் அரசு விழாக்களுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து அரசு விழாவின் மாண்பை காப்பாற்ற வேண்டும்.
முதல்வர் கலந்து கொண்ட விழாவில் திமுக கரை வேட்டிகள் சிலரின் அத்துமீறல்கள் திமுக தலைமைக்கு தெரிய வந்தால், செல்வராஜுக்கும் நிச்சயம் சங்கடமாக இருக்கும். எனவே, எம்.எல்.ஏ. செல்வராஜ் தனது ஆதரவாளர்களின் ஆட்டத்தை அடக்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள நற்பெயர், இதுபோன்ற அல்லகைகளால் நிச்சயம் பாதிக்கப்படும்.