சென்னையில் காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை..!
கடந்த இரண்டு வாரமாக சென்னை முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. கோடை வெயிலுக்கு நிகராக வெப்பம் வாட்டி வதைத்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
பலத்த மழையால் எழும்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பெரம்பூர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக முக்கிய சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாடியிலிருந்து அம்பத்தூர் வழியாக ஆவடி செல்லும் சாலையில் வெள்ள நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




