--- --:--:-- --

விஜய் கட்சி கொடியில் அடுத்தடுத்து சர்ச்சை..!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கொடிப் பாடலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார்.

 

கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.டி.ஐ.செல்வம். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்று உள்ளது.

 

மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2012ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மிக தெளிவாக, சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் அல்லது தேர்தல் சின்னத்தில் விலங்குகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று கூறியுள்ளது.

ஆகவே, இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால் அதனை நீக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதிலளிக்க தவெக முடிவெடுத்துள்ளதாகவும், கொடியில் வண்ணங்கள், அதில் இடம்பெறும் விஷயங்களை அமைக்க கட்சிக்கு உரிமை உள்ளதாகவும் தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon