--- --:--:-- --

காவிரி நதி நீர் விவகாரம் – இன்று சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம்

4

காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆணைப்படி நீரை விடுவிக்காத கர்நாடகாவின் செயல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியது என்று முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

காவிரியில் ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. அதாவது வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

 

மேலும் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்க கர்நாடக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ஒழுங்காற்று குழுவின் ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை திறந்து விட இயலாது என்று, கர்நாடக அரசு கூறியது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை உடனடியாக செயல்படுத்திட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆணைப்படி நீரை விடுவிக்காத கர்நாடகாவின் செயல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியது என்று முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்கின்றனர். இதனிடையே காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon