--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை..!

2

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும், படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடை மழை குறைந்துவிட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. எனினும், நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனிடையே, தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் வரும் வியாழக்கிழமை வரை வெப்ப அலை வீசும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 108 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon