இசையில் அரசியலைக் கலக்க வேண்டாம் – முதலமைச்சர்
’சங்கீத கலாநிதி’ விருது தேர்வாகியுள்ள இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது செயலை பாராட்டி, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ’சங்கீத கலாநிதி’ விருது தேர்வாகியுள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் டி.எம்.கிருஷ்ணாவை விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
டி.எம்.கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





