--- --:--:-- --

பாலமேடு ஜல்லிக்கட்டு : 4வது முறையாக முதல் பரிசை வென்ற வீரர்!

1.1

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தின் முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. இதில், முதல் பரிசை வென்ற மாடுபிடி வீரருக்கும் காளைக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் விளையாட 3,677 காளைகளும், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1,000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டனர்.

 

விழா கமிட்டியினர், ஊரார் மேள தாளம் முழங்க 7 கோவில் காளைகளுடன் வாடி வாசலுக்கு வந்து வழிபாடு முடித்த பின்னர், காலை 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி பிடித்தனர்.

 

மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 781 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 485 வீரர்கள் களம்கண்டனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்தனர்.

 

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர், கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றவர் ஆவர். தனது நண்பர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.

 

இதேபோன்று இரண்டாவது இடம்பிடித்த தமிழரசனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்றிருந்தார்.இதேபோன்று முதலிடம் பிடித்த புதுக்கோட்டை இராயவயலை சேர்ந்த சின்னக்கருப்பு காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. தேனி கோட்டூரை சேர்ந்தர் அமர்நாத் காளை இரண்டாம் இடம்பிடித்தது.

 

10 சுற்றுகள் முடிந்த நிலையில் தற்போது போட்டி நிறைவு பெற்றது. இன்று மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். இதில் ஒன்பது பேர் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon