நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்..!
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் நேற்று இரவு முதல் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், 450 ஆண்டுகள் பழமையான சென்னை சாந்தோம் தேவாலயத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபம் காட்சிப்படுத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியது. கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டும் இன்றி, பசலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாலன் பிறப்பு தத்ரூபமாக குடிலில் காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர், மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு, தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், வழக்கத்திற்கு மாறாக கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




