கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த ஒரு கோடியே 65 லட்சம் பெண்கள் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்புவதால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று சிறப்பு திட்டங்கள் செயலாகத் துறை தெரிவித்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார் என்றும் மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





