100வது நாள் தடுப்பூசி.. காலில் கட்டியாக மாறிய மருந்து..!
பிறந்து 100 நாள் ஆன குழந்தைக்கு கவனக் குறைவாக தடுப்பூசி செலுத்தியதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரியா – முருகன் என்ற தம்பதியினருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மே 24ஆம் தேதி நூறாவது நாள் தடுப்பூசி செலுத்த குழந்தையை அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து செவிலியர் குழந்தைக்கு சரியான முறையில் தடுப்பூசி செலுத்தவில்லை.
அதனால் குழந்தையின் இடது காலில் தடுப்பூசி செலுத்திய இடத்திலிருந்து உடலுக்கு மருந்து செல்லாமல் அங்கேயே தேங்கி இருந்துள்ளது. இதனால் குழந்தையின் காலில் தடுப்பூசி செலுத்திய பகுதி சிவந்து நாளுக்கு நாள் கட்டியாக மாறி உள்ளது.
குழந்தையின் பெற்றோர் வீக்கமாக இருக்கும் என்று கருதி தினமும் ஐஸ் கட்டியை வைத்துள்ளனர். அப்படியும் வீக்கம் குறையவில்லை என்பதால் மேடவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.
அப்பொழுதுதான் தடுப்பூசி சரியாக செலுத்தவில்லை என்பதால் இது போன்ற வீக்கம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் ஊசி குத்தப்பட்ட இடத்தை கிழித்து அந்த பகுதியில் இருந்த மருந்தினை வெளியே எடுத்தனர்.
தற்பொழுது குழந்தையின் காலில் ஊசி செலுத்திய பகுதி ஓட்டை விழுந்தது போல் உள்ளது. காயம் குணமடையாமல் இருப்பதால் தினமும் வலி தாங்காமல் குழந்தை அழுது துடிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். ஊசி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





