வன்முறைக்கூடமாகும் வகுப்பறைகள்: “மங்கலம் பள்ளியில் மாணவர்கள் ரணகளம்!” திருப்பூர் பள்ளிகளில் தொடரும் அவலம்!!
பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கும், மங்கலம் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மாணவருக்கு காயம் ஏற்பட்டது. தொடரும் மோதலால், பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்; மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக, பேனா ஏந்தும் மாணவர்கள் ஆயுதம் ஏந்தும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வது, வாடிக்கையாக உள்ளது. பேருந்துகளில் கலாட்டா செய்தது, வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, ஆசிரியரை கத்தியால் குத்த முயல்வது என்று வன்முறை களமாக வகுப்பறைகள் மாறி வருகின்றன.
கடந்த 2 மாதங்களில் மட்டும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், பாடத்தை கவனிக்காமல் வகுப்பறையில் உறங்கிய 12ம் வகுப்பு மாணவனை, தாவரவியல் ஆசிரியர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆவேசமான மாணவன், ஆசிரியரை ஓங்கி அடிக்கப் பாய்ந்தான்.
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவர் ஒருவர், சக மாணவரை ஆபாசமாக பேசினார். இதனால் மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து கட்டை, கம்பியால் அடித்துக் கொண்டனர்.
கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல, மாணவிகளும் மோதிக்கொள்ளும் போக்கு, மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் பலரும் இருக்கும் பரபரப்பான மாலை வேளையில், மாணவிகள் இரு குழுக்களாக மோதிக் கொண்டனர்.
இதைவிடக் கொடுமை திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் நடந்துள்ளது. அங்குள்ள கோ.ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகள் பெண் ஆசிரியரை தாக்கியுள்ளனர். இதை கண்டித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிடும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
மாணவர்களின் மோதல் வாக்குவாதம்- சாதாரண அடிதடியோடு நின்றுவிடாமல் கொலையில் போய் முடிந்திருப்பதுதான், பெற்றோரையும் ஆசிரியர்களையும் பதற வைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் அருகேயுள்ள பள்ளகால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஏப்ரல் 26ம் தேதியன்று +2 வகுப்பு மற்றும் +1 வகுப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், சூர்யா என்ற மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மாணவன், சிகிச்சை பலன்றி இறந்தான்; இது தொடர்பாக, முக்கூடல் போலீசார் மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தலைதூக்கியுள்ளது
மாணவர்களின் மோதல் கலாச்சாரம், திருப்பூர் மாவட்டத்திலும் தலைதூக்கியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மங்கலம் அரசு பள்ளியில் அண்மையில் நடந்த மோதல்களை சொல்லலாம். கடந்த 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்காக, வஞ்சிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், மங்கலம் அரசு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அப்போது, மங்கலம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலர், வெளியூர் மாணவர்களை பார்த்து கேலி செய்துள்ளனர். வாட்ச் கட்டியிருந்த மாணவர்களிடம் வாட்ச் கழற்றச் சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு, வெளியூர் மாணவர்கள் சிலர் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் மீது மங்கலம் பள்ளி மாணவர்கள் சிலர் தள்ளிவிட்டனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது; வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு, மேசை மீது வெளியூர் மாணவர்களை தள்ளிவிட்டதில், சிலருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவர்களின் மோதலை கண்டு பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சிலர், மாணவர்களை சமாதானம் செய்து வைக்க முற்பட்டபோது, அவர்களையும் மாணவர்கள் தாக்கப் பாய்ந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது, அங்கு ஒன்றிரண்டு போலீசார் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தனர்; அவர்களும் மோதிக்கொண்ட மாணவர்களை தடுக்கவோ, விலக்கவோ முற்படாமல் வேடிக்கை பார்த்ததாக, பெற்றோர் பதற்றமுடன் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, பெற்றோர் சிலர் நமது “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளிகள் செயல்படவில்லை; இந்த ஆண்டு முழுமையாக நடக்காத நிலையில், தற்போது பொதுத்தேர்வு நடக்கிறது. பாடங்கள் முறையாக படிக்காமல், தேர்வுக்கு தயாராக முடியாத சூழலில் மன அழுத்தத்தில் மாணவர்கள் தேர்வுக்கு கடினமாக தயாராகி, நெருக்கடியுடன் தேர்வறைக்கு செல்கின்றனர்.
ஆனால், அப்படி தேர்வெழுத சென்றால், அங்கு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மங்கலம் பள்ளியில் எப்போது தேர்வெழுதச் சென்றாலும் மாணவர்கள் மத்தியில் மோதல் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த முறையும் 10ம் வகுப்பு தமிழ்த் தேர்வு நடைபெற்ற மே 6ம் தேதி, வெளியூர் பள்ளி மாணவர்களை, மங்கலம் பள்ளி மாணவர்கள் சிலர் கடுமையாக தாக்கி, காயம் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அருகில் இருந்த போலீஸ்காரர்கள் இதை வேடிக்கை பார்த்தார்களே தவிர, தடுக்க முற்படவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்கு வெகு அருகில் தான் மங்கலம் காவல் நிலையம் உள்ளது. உடனடியாக கூடுதல் போலீசார் வந்து, நிலமையை கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்படி அடிக்கடி நடப்பது தெரியும் என்பதால், முன்கூட்டியே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்திருக்க வேண்டும். ஆனால், மங்கலம் போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மோதல் தலைதூக்கியுள்ள நிலையில், ஏற்கனவே அடிக்கடி மோதல் நிகழ்ந்துள்ள மங்கலம் பள்ளி விஷயத்தில், போலீசார் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் இவ்விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். இதனால், தேர்வெழுத வரும் மாணவர்கள் பீதிக்குள்ளாகி, அது தேர்வில் எதிரொலிக்கும்; மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, கல்வித்துறையும், காவல் துறையும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மங்கலம் பள்ளியில் நடைபெற்ற வன்முறை இனி நிகழாமல் இருக்க, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். வெளியூரில் இருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு, அவர்கள் சென்று வர தனி வழி, புத்தகங்கள் வைப்பதற்கு தனி அறை உள்ளிட்டவற்றுடன் உரிய போலீசாரை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். நிம்மதியான, அச்சமில்லாத சூழல் நிலவினால் தான், மாணவர்கள் பதற்றமின்றி தேர்வெழுத முடியும். இனியும் மங்கலம் பள்ளியில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றால், தேர்வு மையம் என்ற அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் கூறினர்.
பெண் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபம்
நாட்டின் எதிர்காலமே, வருங்காலத் தூண்களாக கருதப்படும் மாணவர்களின் கையில் தான் உள்ளது. ஆனால், இன்றைய மாணவர்கள் சிலர் தவறான சேர்க்கையால் கைகளில் ஆயுதங்களை எடுப்பது, உண்மையில் கவலைக்குரியது.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து பள்ளிக்கு வரும் சூழல் மாறி, இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து பள்ளிக்கு வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, பெண் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது.
எனவே, தவறு புரியும் மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்காலம் பாதிக்காதவாறு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்களுக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கும். பள்ளிகளில் நல்லொழுக்க போதனைகளை கற்பிக்க வேண்டும். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மாணவகள் சந்தித்துள்ள உளவியர் ரீதியான பிரச்சனைகளுக்கு, உரிய மனநல ஆலோசகரை கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகங்களின் செயல்பாடுகள் சம்பிரதாயமாக இல்லாமல், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை பேசித்தீர்க்க உதவ வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களின் மோதல், கொலை வரை சென்றுள்ள நிலையில் காவல்துறையினரும், திருப்பூர் மாவட்ட கல்வித்துறையினரும், இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மங்கலம் பள்ளியில் நிகழ்ந்துள்ள சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரு துறைகளும் இணைந்து செயல்பட்டு, மாணவச் செல்வங்களின் மனதில் நம்பிக்கையை, நல்லொழுக்கத்தை விதைக்க வேண்டும்.
மங்கலம் பள்ளிக்கு இது புதியதல்ல!
இது குறித்து, ஆசிரியர்கள் சிலர் நம்மிடம் கூறியதாவது: மே 6ம் தேதி தேர்வெழுத வந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உண்மைதான். இது ஒன்றும் மங்கலம் பள்ளிக்கு புதியதல்ல. இங்குள்ள சில மாணவர்கள், வெளியாட்கள் சிலர் ஆதரவுடன் பள்ளியில் பிரச்சனை செய்வது வாடிக்கையாக உள்ளது.
மங்கலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகச்சிறந்தவர்கள்; நல்ல ஆற்றலை கொண்டவர்கள். அதே நேரம், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருசிலர் இவ்வாறு ரகளை செய்வதால், ஒட்டுமொத்த பள்ளியின் பெயரும் கெட்டுவிடுகிறது. பிரச்சனை செய்யும் மாணவர்களில் ஒருசிலர், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், போலீசார் உட்பட யாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
ஒழுங்கீன மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்கும்போது, மாணவர்கள் வேறுவகையில் ஆசிரியர்களை பழிக்குபழி வாங்குகின்றனர். அண்மையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலரை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உபயதுல்லா, அந்த பகுதி வார்டு கவுன்சிலரின் கணவா் அப்பு உள்ளிட்டோர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆனால், மாணவர்களில் காதில் இதெல்லாம் விழவில்லை. மாறாக, ஆவேசமடைந்த சில மாணவர்கள், அண்மையில் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கொண்டு வந்த காரை அடித்து சேதப்படுத்தி இருக்கின்றனர். கழிவறை கண்ணாடிகளை நொறுக்கியுள்ளனர். இது குறித்து கடந்த 27ம் தேதி, பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பில், மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல், பள்ளிக்கு அருகாமையில் கஞ்சா உபயோகித்துக் கொண்டிருந்த 6 மாணவர்களை, ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைந்துள்ளனர். எனினும், வழக்கம் போல் போலீசார் சாக்குபோக்கு சொல்லி, காலம் தாழ்த்தியுள்ளனர். கலவரம் செய்த மாணவர்கள் மற்றும் வெளியாட்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே, கைகட்டி வேடிக்கை பார்ப்பதால், ஆசிரியர்களாகிய நாங்கள், பள்ளிக்கு நிம்மதியாக செல்ல முடிவதில்லை. ஒருசில மாணவர்களின் செயலால், எங்களது பள்ளியின் நற்பெயர் கெடுவது வேதனை அளிக்கிறது. மங்கலம் பள்ளி விவகாரத்தில் கல்வித்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மங்கலம் காவல் ஆய்வாளர் ராஜவேலிடம் குற்றம் குற்றமே தரப்பில் அணுகி கேட்டபோது, மாணவா்கள் மோதல் விவகாரம் குறித்து எங்களுக்கு புகாரும் எதுவும் இதுவரை வரவில்லை. புகாா் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X







