இதயத்துடிப்பு நின்று போன சிறுமிக்கு சுவாசத்தை மீட்ட அரசு மருத்துவர்கள்..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி இதயத் துடிப்பு நின்று போன 12 வயது சிறுமியின் சுவாசத்தை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி மீட்டனர். தீபிகா என்ற அந்த சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.
அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து வந்த ஸ்டெ வயர் எனப்படும் தாங்கு கம்பியின் வழியே மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து அவர் மூச்சு பேச்சின்றி ஆக்கியுள்ளார்.
உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு டிஃபிப்ரிலேட்டர் என்ற கருவியின் உதவியுடன் சிறிய அளவிலான மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுமையின் சுவாசத்தை மீட்டு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






