கோவையில் கொரொனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!
கோவையில் கல்லூரிகளில் 46 மாணவர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரொனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கோவை மாவட்டத்தில் பால், மருந்தகங்கள், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அதிலும் 50 சதவீத கடைகள் மட்டுமே சுழற்சி முறையில் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் வெளிமாவட்ட வாடிக்கையாளர்கள் சந்தைக்கு வராமல் இருப்பதை சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் 46 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கொரொனா தொற்று பாதிப்புடன் வந்த நான்கு மாணவர்கள் மூலம் பிறருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






