ஏடிஎம் மையத்தின் கட்டடத்தில் அடிக்கும் ஷாக்..!
மழை பெய்ததால் ஏடிஎம் மையத்தில் கட்டடங்கள் திடீரென்று கரண்ட் ஷாக் அடிப்பதால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்க்கு சென்றால் பணம் இல்லை என்று ஷாக்கான காலம் போய் தற்போது ஏடிஎம்களில் சாகடிக்கும் வினோதம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஏடிஎம் மையத்தில் நடந்துள்ளது.
தேவகோட்டை ராம்நகரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. மழை நின்றபின் தேவகோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஆசைத்தம்பி என்பவர் தனது மகளுடன் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது பணம் எடுக்கும் மிஷினை தொட்டவுடன் ஷாக் அடித்துள்ளது. பிறகு அந்த கட்டடத்தை தொட்டால் ஷாக் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஒரு டெஸ்ட் வைத்து பரிசோதனை செய்ததில் கட்டடத்தில் மின்சாரம் இருப்பது தெரிந்தது.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்க தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினர் தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் வந்து சரி செய்ததாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.






