கொடைக்கானலில் பரவி வரும் காட்டுத் தீ..!
கொடைக்கானலில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதியிலும் வருவாய் நிலங்களிலும் காட்டுத் தீயானது மளமளவென்று பரவி வருகிறது.
அந்த காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வனத்துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
அதன் தாக்கத்தால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் பெரும்பள்ளி பல சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி, பொய்யா வெளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீயானது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதனால் வனப் பகுதிகளில் உள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. மேலும் காட்டுத்தீயின் காரணமாக இந்த பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து விடும் ஆபத்தான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசி வருவதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். தொடர்ந்து எரிந்து வருவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





