பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து விலகியது லோக் ஜனசக்தி!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வராக ஏற்க மறுத்து ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.இதனால் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கள் இடையே 50:50 தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பீகார் சட்டப்பேரவையில் மொத்த முள்ள 243 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 71 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் அங்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் களம் காணவுள்ளன.

 

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ் (எம்.எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 122 தொகுதிகளும், பாஜகவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இந்தக் கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி, கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடித்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளமோ பிடி கொடுக்காமல், பாஜக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இருந்து ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என நழுவியது. இதையே சாக்காக வைத்து பஸ் வானின் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

 

ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடப் போவதாக லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. மேலும் தேர்தலுக்குப் பின் பாஜக – ஜனசக்தி கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என லோக் ஜனசக்தி தலைவர் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கூறியுள்ளதால் பீகார் தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave a Reply