இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து எகிறி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அரை லட்சத்தை எட்டியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கிய நிலையில், மொத்த உயிரிழப்பும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினமும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு எண்ணிக்கை மளமளவென உயர்ந்து அமெரிக்கா, பிரேசில் நாடுகளுடன் போட்டி போட்டு வருகிறது. கொரோனா நிலவரம் தொடர்பாக
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் உயிரிழப்பும் 740 ஆக பதிவாகி உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 30,601 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 8,17,208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,40,135 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் பாதிப்பில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் 1,92,964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில் 1,27,364 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் 3,745 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, குஜராத், உ.பி., ஆகிய மாநிலங்களிலும் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க…