கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! காரணம் என்ன? சென்னை ஸ்டான்லியில் அதிர்ச்சி!!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை செய்து கொண்ட இளம் மருத்துவரான கண்ணன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர். 24 வயதே ஆன கண்ணன் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு, மருத்துவ பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடித்துவிட்டு இரவு 9.30 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் தனது அறையில் தங்கியுள்ளார்.
இன்று காலை 5.30 மணியளவில் திடீரென 3-வது மாடியில் இருந்து கண்ணன் கீழே குதித்த தாக தெரிகிறது. மருத்துவமனையில் பலர் கண் எதிரே டாக்டர் கண்ணன் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தலை, உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த கண்ணனை அந்த மருத்துவமனையிலேயே உடனே சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்து விட்டார். கொரோனா தொற்று காரணமாக பாதிப்புக்கு ஆளான ஏராளமான பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கொரோனா வார்டில் தொடர்ந்து இரவுப் பணியில் இருந்த இளம் மருத்துவரான கண்ணன், அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே வேளையில் கண்ணனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனராம் , இதனால் தற்கொலைக்கு வேறு காரணம் உண்டா? என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடிய கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் பணியில் உள்ள மருத்துவர்கள் முதல் சுகாதாரப் பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் டாக்டர் கண்ணன் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.






