கோவையில் காதலை ஏற்க மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொன்ற ரதீஷ் கேரளாவில் கைது !!!
கோவை பேரூர் ஆறுமுக கண்டனூர் பகுதியை சேர்ந்தவன் ரத்தீஷ் (21).இவன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரிய வந்த நிலையில் ரத்தீஷ் உடன் பேசுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னரும் ரத்தீஷ் வாட்ஸ் ஆப் மூலம் பேச முயற்ச்சித்து வந்துள்ளார்.ஆனால், அந்த சிறுமி ரத்தீஷுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஆவேசமடைந்த ரத்தீஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டின் முன் சென்று அவருடன் பேச வெளியே வரும்படி கேட்டார். அவள் தனது தந்தை சக்திவேலுடன் வெளியே வந்தபோது ரத்தீஷ் திடீரென சிறுமியை வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளான்.
அவரது தந்தை சக்திவேல் அவளைக் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. பக்கத்திலிருந்தவர்களும் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால்,அந்த இடத்திலிருந்து ரத்தீஷ் தப்பிச்சென்றுள்ளார். காயமடைந்த சிறுமி மற்றும் அவரது தந்தை சக்திவேல் ஆகியோர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.மேலும்,தப்பி ஓடிய ரத்தீஷை தேடி வந்தனர்.இந்த நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து இவ்வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரத்தீஷை இன்று கேரள மாநிலம் ரேக்கன் ரோல் வன சரக சோதனைச் சாவடி அருகே கைது செய்துள்ளனர்.சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக இவ்வழக்கில் கூடுதலாக போக்சோ சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும்,இதுபோன்ற ஒருதலைக் காதல், வற்புறுத்தி காதல் செய்ய வலியுறுத்தல் சம்பவங்கள் நிகழும் போது அதை பெற்றோர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்றும், உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேவைக்கு ஏற்ப மாணவிகளின், பெற்றோர்களின் விபரங்கள் தொடர்பான இரகசியம் காக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ரத்தீஷை கண்டுபிடிக்க தகுந்த புலன் வைத்து சிறப்பாக செயல்பட்ட பேரூர் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் குழுவினரை மாவட்ட எஸ்.பி. அருளரசு வெகுவாக பாராட்டியுள்ளார். ஒரு தலைக்காதலால் காதலிக்க மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






