சென்னையில் கொரோனாவுக்கு காவல் துறையில் மேலும் ஒரு பலி.. பட்டினப்பாக்கம் எஸ்.ஐ. இன்று உயிரிழப்பு!!
கொரோனா பாதிப்பால் சென்னை காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி பலியான நிலையில் காவல்துறை தரப்பில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அதே போல், பெரு நகரங்களில் மும்பை, டெல்லிக்கு அடுத்ததாக சென்னை நகரம் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் சென்னையில் மட்டும் 3-ல் இரண்டாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 1, 201 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதில் சென்னையில் மட்டும் 888 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் சென்னையில் தான் கொரோனா தடுப்பில் களத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர் மட்டுமின்றி ஊடகத்துறையினர், அரசியல் புள்ளிகள் என பலரும் பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். ஏற்கனவே சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்த நிலையில், சென்னை காவல்துறையில் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.






