நடிகர் அஜீத் தலைமையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு..!
கொசுவை ஒழிக்க ஆங்காங்கே கொசு மருந்து அடிக்கும் நிலை மாறி தற்போது வீதி வீதியாக கொரொனா கிருமி நாசினி தெளிப்பது வாடிக்கையாகிவிட்டது. தெருக்கள்தோறும் ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது, வாகனங்களில் வைத்து தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில்தான் வானிலிருந்து கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மைதானத்தில் சார் ஆட்சியர் சரவணன் முன்னிலையில் இதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. துளசி, கற்றாழை உள்ளிட்ட மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கிருமினாசினியை டிரோன் மூலம் தெளித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
16 லிட்டர் வரை கிருமி நாசினியை நிரப்பும் கொள்ளளவு வசதிகொண்ட டிரோன் மூலம் ஒரு ஹெக்டேர் பரப்பளவு வரை கிருமிநாசினி தெளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இயற்கை மூலிகையிலான கிருமி நாசினி என்பதால் கண், மூக்கு, எரிச்சல் உள்ளிட்ட எந்தவித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்சா குழுவின் ஆலோசகராக செயல்படும் நடிகர் அஜித் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி தக்சா குழுவின் டிரோன் மூலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் அமைப்பு மூலிகை கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குகை அமைத்து மக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட விவகாரம் விவாதத்திற்கு உள்ளான நிலையில் நடிகர் அஜித்தின் வான்வெளி கிருமி நாசினி தெளிப்பு எந்த அளவிற்கு கொரொனாவை கட்டுப்படுத்தும் என்பது கிருமி நாசினி டிரோன் செயல்பாட்டிற்கு வரும் போதே தெரியவரும்.






