மாணவர்கள் ஆல் -பாஸ்… எதிர்க்கட்சிகள் ஆட்டம் க்ளோஸ்!! முதல்வரின் திடீர் மனமாற்றத்தின் பின்னணி!

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதில் நீடித்து வந்த சஸ்பென்சுக்கு, ஒருவழியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பெரும் நிம்மதியை தந்துள்ளது.

 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் கால் பதித்ததால், மார்ச் 24ம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டனு.

அந்த நேரத்தில் பிளஸ் 2 தேர்வு, பெரும்பகுதி முடிந்து, பிளஸ் 1 தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர், ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாணவர்களுக்கு படிக்க அவகாசம் தேவை என்ற கோரிக்கைக்கு பிறகு, ஜூன் 15ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, கொரொனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத்தேர்வு நடத்துவதா என்று தமிழக அரசை பலரும் குடையத் தொடங்கினர். ஆனால், இதுதான் தேர்வு நடந்த உகந்த தருணம் என்று கூறி, இம்முறை எப்படியும் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அறிவித்ததோடு, பள்ளிகளில் ஹால் டிக்கெட் வினியோகமும் தொடங்கியது.

 

ஆனால், எதிர்க்கட்சிகள் அரசை விடுவதாக இல்லை. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது; இந்த நேரத்தில் பொதுத்தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பெரும் மனஉளைச்சலை தரும்; பல லட்சம் மாணவர்களின் உடல் நலனுக்கும், எதிர்காலத்துக்கும் அரசின் பிடிவாதம் கேடு விளைவிக்கும். இவ்விஷயத்தில் அரசு தனது நிலையில் இருந்து இறங்கி வந்து, பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று, திமுக, காங்கிரஸ், அமமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. பொதுத்தேர்வை ரத்து செய்யா விட்டால், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.

இது ஒருபுறம் இருக்க, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியாக வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டது. மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? தேர்வை தள்ளி வைப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை என்று கிடுக்கிப்பிடி போட்டது. தற்போதைய சூழலில் பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நீதிமன்றம், தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

 

இதற்கெல்லாம் மேலாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அங்கு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து ஆல்- பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்திய கடந்துவிட்டது; தெலுங்கானாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்தை கூட தாண்டவில்லை. அப்படியிருக்க, அங்கேயே பொதுத்தேர்வு ரத்து செய்துள்ளது, தமிழக அரசை சிந்திக்க வைத்தது.

 

மேலும், பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யத் தொடங்கிவிட்டதை உணர்ந்த முதல்வர் பழனிச்சாமி, இனி அவர்கள் பலன் பெற அனுமதிக்கக் கூடாது; நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அறிவுரை வழங்கி இருப்பதால், பொதுத்தேர்வை ரத்து செய்து, இனி ஆல் பாஸ் அறிவிப்பை வெளியிடும் முடிவுக்கு வந்தார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி, அதை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை செய்தியாளர்களிடம் தெரிவித்ஹ்டார். இது குறித்து முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது:

 

கடந்த 2019- 20ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டுப் போன வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழில்கல்வி பாடங்களுக்கான தேர்வுகளை ஜூன் 15 முதல் 25 வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை ஆய்வு செய்து, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய்த் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

 

ஜூலை 15ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், 11ம் வகுப்புக்கு விடுபட்ட மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும். விடுபட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேர்வுக்கான நாள், பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

 

 

முதல்வரின் இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், பெற்றோருக்கு நிம்மதியையும் தந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் அவசியம் இல்லாததால் நிம்மதியாக வீட்டில் பொழுதை செலவிட்ட நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களோ, இந்த விடுமுறை முழுவதுமே படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அரசின் அறிவிப்பால், அவர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சிகள் ஏமாற்றம்!

பொதுத்தேர்வுக்கான எல்லாம் ஏற்பாடுகளும் முழுமையடைந்து, ஹால் டிக்கெட்டும் வினியோகிக்கப்பட்டதால், அரசு இந்த விஷயத்தில் இறங்கி வராது என்று நினைத்து, எதிர்க்கட்சிகள் நினைத்து வந்தன. ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் செய்ய ஒரு வாய்ப்பாக, 10ம் வகுப்பு தேர்வை பயன்படுத்தின.

 

ஆனால், திடீரென தமிழக அரசு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவித்து, எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்துள்ளன. தேர்வை அரசு தள்ளிப் போடும்; ஆனால், ஆல்- பாஸ் வழங்காது என்றே திமுக உள்ளிட்ட கட்சிகள் நினைத்து வந்த நிலையில், அந்த நினைப்பில் அரசு மண்ணை போட்டுள்ளது.

 

இதனால், அதிமுக அரசின் பொதுத்தேர்வு ரத்து என்ற முடிவை திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டவை வரவேற்றுள்ளன. அதேநேரம், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவோ, அரசுக்கு ஒரு குட்டை வைத்து விமர்சனம் செய்துள்ளது.

 

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஐகோர்ட் கண்டனம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக கண்டிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply