ஜூன் 1 முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம்!
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் முன்னதாகவே முடிவடைந்ததாக மத்திய நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்தை பெருக்குவதற்காக இந்தியக் கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான அறிவிப்பு மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைபகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரொனா முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை 17 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் ஜூன் 14ஆம் தேதிக்கு பதில் மே 31ம் தேதியே முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேற்கு கடற்கரைப் பகுதியில் தடைகாலம் ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.






