மே 31-ஆம் தேதி பொது முடக்கம் நிறைவுபெற இருக்கும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.
கொரொனா மருத்துவ பரிசோதனை தொடர்பாக செயல்படுத்த வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள், உயிரிழப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் நோய் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கொரொனா வைரஸ் தொற்றை தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொது முடக்கம் குறித்தும் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.