நெல்லை மாவட்டத்தில் செல்லமாக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருக்கிறார் ஒரு கொடூர இளைஞர். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டவர் சிக்கியது எப்படி?
டிக் டோக் வீடியோ வெளியிட்டு அதிக லைக்குகள் அள்ளி பிரபலமாகி விட வேண்டும் என்ற வெறியில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் பூனையை உயிரோடு தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ளார் இளைஞர் தங்கராஜ். தங்கராஜ் இப்படி நடந்து கொள்ள காரணம் என்ன?
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த செட்டி குலத்தைச் சேர்ந்தவர் 19 வயதான தங்கராஜ். தந்தை சுயம்பு மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் இளைஞர் தங்கராஜ். தொழில் நேரம் போக மாற்றம் நேரம் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவதில் தங்கராஜ் குறியாக இருந்து வந்துள்ளார்.
தங்கராஜின் சொந்த முயற்சிகளுக்கு அதிகளவில் லைக்குகள் கிடைக்காமல் போகவே மாட்டுப் பண்ணையில் உள்ள பசு மாடுகள் மற்றும் தான் வளர்க்கும் நாய் இவற்றுக்கு குரல் கொடுத்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். இதிலும் போதிய லைக்குகள் கிடைக்காததால் மனம் நொந்த தங்கராஜ் அவரது நண்பர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து கொள்ள வேண்டியதுதானே என தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.
அதனால் தான் ஆசையாக வளர்த்த பூனை தனது மாட்டு தொழுவத்தில் உயிரோடு தூக்கில் தொங்க விட்டு அதையும் வடிவேலு காமெடி காட்சி வசனங்களோடு டிக் டாக்கில் வீடியோவாக வெளியிட்டார் தங்கராஜ். இந்தப் பூனை வீடியோவுக்கு அதிக அளவில் லைக்குகள் கிடைத்துள்ளன. அதேநேரம் இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
அதிர்ச்சியடைந்த பழவூர் போலீசார் உடனடியாக தங்கராஜை பிடித்து விசாரித்தபோது லைக்குகளுக்காக இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.