சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இணையத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.காரைக்குடி முத்துப்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கலையரசன் (எ) விக்கி (25). டிப்ளமோ பட்டதாரியான இவர், ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கால் சொந்த ஊரில் தங்கியிருந்தார்.
இவர் ஓராண்டாக இணையத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்துள்ளார். மேலும் அவற்றை பதிவிறக்கம் செய்து, சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களுக்கும் அனுப்பி வந்துள்ளார்.இந்நிலையில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் குற்றம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் தமிழகம் முழுவதும் ஆபாச படம் பார்ப்போரின் பட்டியலை தயாரித்து தேடி வருகிறது.
அதன்படி கலையரசன் குறித்து சென்னை போலீஸார் காரைக்குடி மகளிர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்து கலையரசனை கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் சிறார் ஆபாச படங்களை பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர் கலையரசன் என்பது குறிப்பிடத்தக்கது.