புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு உத்திரப்பிரதேச அரசு அனுமதி அளிக்காத நிலையில் பாஜக கட்சிக் கொடியை கூட கட்டிக்கொள்ளுங்கள் ஆனால் பேருந்தை அனுமதியுங்கள் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வேலையும் இல்லை, வருமானமும் இல்லை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பசியும் பட்டினியும் ஆகவே நகர்ந்து வருகிறது. சிலர் நடந்தே சொந்த ஊரை அடைந்து விட, சிலர் பிணமாக சொந்த ஊர் போய் சேர்ந்தனர். பலர் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றனர்.
இப்படித்தான் நகர்கிறது புலம்பெயர் தொழிலாளர்களின் காலம். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரான உத்திரப் பிரதேசத்திற்கும் 1,069 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார்.
முதலில் ஏற்க மறுத்த அம்மாநில அரசு பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க ஒப்புக் கொண்டது. இருப்பினும் நம்பர் பிளேட் சரியில்லை, சான்றிதழ் சரியில்லையென பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி பேருந்துகளில் பாஜகவின் கட்சி கொடியை கூட கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் பேருந்துகளை இயக்க உடனடியாக அனுமதி கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாலைகளில் நடந்து கொண்டிருப்பவர்கள் வெறும் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் இந்தியாவின் முதுகெலும்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் வியர்வையால் தான் இன்னும் இந்தியா ஓடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளை இயக்க உத்திரப்பிரதேச மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்காததால் அடுத்தது என்ன என்பது புரியாமல் நிலைகுலைந்து உள்ளனர் புலம்பெயர் தொழிலாளர்கள்.